தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2022, 5:16 PM IST

ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் புனை கதை தான், ஆனால்! - மணிரத்னம் கூறும் நெகிழ்ச்சிக்கதை

கல்கியின் அடித்தளத்தை மீறி நான் போகவில்லை. ஆனால் அந்த கதையில் இருந்து வரும் இது இன்னொரு கிளை என பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கல்கியின் அடித்தளத்தை மீறி நான் போகவில்லை - இயக்குனர் மணிரத்னம் நெகிழ்ச்சி பதிவு
கல்கியின் அடித்தளத்தை மீறி நான் போகவில்லை - இயக்குனர் மணிரத்னம் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம், பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த நாவலை எம்ஜிஆர் முதல் பலரும் திரைப்படமாக்க முயற்சித்து வந்தனர். தற்போது அதனை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளார், இயக்குனர் மணிரத்னம். பல முண்ணனி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்களில் வணிக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வெற்றியை பதித்து வருகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தை இரண்டு பாகமாக இயக்கியது குறித்து இயக்குநர் மணிரத்னம் கூறுகையில், “பொன்னியின் செல்வனை படித்த பலரும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதேபோல் நான் படமாக்கி கொண்டேன். நான் முதன்முதலாக பெரிய நாவல் படித்தது, கல்கியின் பொன்னியின் செல்வன்தான். சென்னையில் உள்ள லாய்ட்ஸ் சாலையில் ஈஸ்வரி லெண்டிங் நூலகம் உள்ளது.

அங்குதான் பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் மணியம் சாரின் ஓவியங்களுடன் படித்தேன். முழு கதையையும் ஒரே நீட்டிப்பில் படித்து முடித்தேன். படிக்கும்போது புன்னகையுடன் படித்தேன். சோழர்களுடைய நிலப்பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை இவை யாவும் என் மனதைவிட்டு போகவே இல்லை. அவர் எழுதிய விதம், படிப்பவர்களை தன்வசம் ஈர்த்துக் கொள்வார்.

எழுத்தால் நம்மிடம் தொடர்ந்து பேசுவார். நான் பாதியிலேயே விட்டு வந்த வந்திய தேவன் என்ன செய்கிறார் என்று ஆர்வமாக பார்ப்போம். அவர் கூடவே பயணித்த உணர்வு வரும். மணியம் சார் ஓவியம் இல்லாமல் கல்கியைப் படித்திருக்க முடியாது. மணியம்தான் அடித்தளமாக இருந்தார். ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் குடுமியோடு மதில் மேல் வெறும் தலை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பவர்.

நந்தினி என்றால் ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுகிறது என்பதை அவரே சுலபமாக வரையறுத்துக் கொடுத்துவிட்டார். ஆனால் அவர் அதை சாதாரணமாக வரையவில்லை, அவரும் அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்கத்துடன்தான் வரைந்து கொடுத்திருக்கிறார். ஆகையால் நான் அந்த அடித்தளத்தை மீறி போகவில்லை. ஆனால் அந்த கதையில் இருந்து வரும் இது இன்னொரு கிளை.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புனைகதை. ஆனால் கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு நடந்த சம்பவங்களையும் வரலாற்றை உண்மையாக எழுதியிருக்கிறார். இதைத் தாண்டி நந்தினி கதாபாத்திரம் மட்டுமே முழுக்க முழுக்க புனையப்பட்டது. மேலும் பல புனையபட்ட கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்து இருக்கிறார். இந்த கதை ஐந்து பாகங்களைக் கொண்டது.

அதை இரண்டு பாகங்களாக இரண்டு படங்களிலேயே கொண்டு வருவதற்கு சில தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில காட்சிகளை நீக்கியது தெரியக்கூடாது. கதையின் ஓட்டம் ஒரே சீராக இருக்க வேண்டும். அதற்காக ஒரு பாலம் கட்ட வேண்டியிருந்தது. கதையாக எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி என்று மூன்று அல்லது நான்கு பக்கங்களில் சொல்லி விடலாம்.

உதாரணத்திற்கு, வந்தியத்தேவன் நந்தினியை பார்க்கும்போது என்ன நினைத்தார் மற்றும் குந்தவையை பார்க்கும்போது என்ன நினைத்தார் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவாக எடுக்கும்போது அந்த அனுகூலம் இருக்காது. சுந்தர சோழரை முதல்முறை பார்க்கும்போதே, முதலில் அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று புரிய வேண்டும். இரண்டாவது பேரரசரின் எண்ணங்கள், இவை யாவும் முதல் காட்சியிலேயே வெளிவர வேண்டும்.

அதனால் அதற்குத் தேவைப்படுபவற்றைக் கொண்டு வருவது அவசியம். அதேபோல் குந்தவை புத்திசாலி. சோழ சாம்ராஜ்யத்தின் தூண். அரசியல் தெரிந்தவர். மேலும் அருண்மொழி வர்மன் வருவதற்கு அவர்தான் முக்கிய காரணம். இப்படி அந்த புத்தகத்தில் நிறைய இடத்தில் நிறைய கதாபாத்திரங்கள் குந்தவையைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கேட்பதை விட பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை கொண்டு வந்தோம்.

மேலும் கல்கியின் எழுத்து அலங்கார தமிழ் இல்லை. அதை மேடையில் நடிப்பதும் கஷ்டம். மேடையின் தரம் சுலபமாக வந்துவிடும். இதில் முதல் விஷயம், இந்த தலைமுறையினருக்கு சுலபமாக புரிய வேண்டும். இரண்டாவது, சோழர் காலத்தை குறிக்க வேண்டும். இதை ஜெயமோகன் மிக எளிமையாக செய்தார். பாரம்பரிய தமிழ்தான். ஆனால் குறுகிய வாக்கியங்களாக எழுதினார்.

அது உணர்ச்சியுடன் நடிப்பதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருந்தது. தமிழ்நாட்டிலேயே பொன்னியின் செல்வன் மீது ஈர்ப்பும், மிகப்பெரிய கொண்டாட்டமும் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதை படமாக எடுக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கலாம். மேலும் முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும் இரண்டாவது பாகம் புரிய வேண்டும்.

இந்த இரண்டு பாகமும் தனியாகவும் இருக்க வேண்டும். சேர்ந்து இருந்தால் இன்னமும் நன்றாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் எடுத்தோம். இந்த புத்தகத்தைப் படித்தவர்கள் நிறைய பேர், இதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதேபோல்தான் இந்த புத்தகத்தில் எனக்கும் நிறைய பிடித்திருந்தது. அதை நான் படமாக்கி கொண்டேன்” என்றார்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் படம் பார்க்க சென்றால் பாப்கார்ன் கட்டாயம் வாங்க வேண்டுமா? - ரசிகர் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details