சென்னை: வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ஜான், சைஜு குருப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், துப்பறியும் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (நவ.16) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினர் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இப்போது மிகுந்த கஷ்டம். நான் நடித்த சின்ன படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன. சின்ன படங்களுக்கு திரையரங்குகளும் கிடைப்பதில்லை. பெரிய படங்கள் எடுத்தால் 500 பேர் பிழைப்பார்கள். சின்ன படங்கள் எடுத்தால் 100 பேராவது பிழைப்பார்கள்.
காளிதாஸ் ஜெயராமுடன் நிறைய படங்கள் நடித்துள்ளேன். உங்கள் அப்பா ஜெயராமைத் தான் முதலில் நான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது அஜித்துக்கு சென்றுவிட்டது. இயக்குநர் மிகவும் திறமையானவர். சின்ன படங்களுக்கு நீங்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும்.
இப்போது எல்லா திரையரங்குகளும் காம்ப்ளக்ஸ் ஆகிவிட்டதால், மக்கள் திரையரங்குகளில் சென்று படம் பார்க்க தயங்குகிறார்கள். அதனால், மூன்று வகையான திரையரங்குகள் இருந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். இந்த சின்ன படத்தின் நிகழ்ச்சிக்கு லோகேஷ் கனகராஜ் வந்தது ரொம்ப சந்தோஷம்” எனக் கூறினார்.
தொடர்ந்து, நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசுகையில், “ நடிகர் விஜய் சொன்ன ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற வசனம்தான் நியாபகம் வருகிறது. சின்ன படத்தை, பெரிய படமாக மாற்றிய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாக வேண்டும் என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஒத்த காலில் நின்றனர். இதற்கு முன்னாடி நான் பண்ணாத கதாபாத்திரமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
பின்னர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “எனது முதல் படமும் ரொம்ப சின்ன படம்தான். நல்ல படமாக இருந்தால் உழைப்புக்கான மரியாதையை இவர்கள் (ரசிகர்கள்) கொடுப்பார்கள். நான் அழைத்தால் காளிதாஸ் எதுவும் கேட்காமல் என் அலுவலகம் வந்துவிடுவார். எனது உதவி இயக்குநர்கள் இவருக்காக கதை எழுதி வருகின்றனர்.
அவரை என் நண்பராக பார்ப்பதை விட நல்ல நடிகராக பார்க்கிறேன். எனக்கு அவரது சின்சியாரிட்டி பிடிக்கும்” என்றார். அப்போது, ரஜினி படம் குறித்த அப்டேட் கேட்டதற்கு, அடுத்த வாரம் ரஜினி 171 படத்தின் கதை எழுதப் போவதாகவும், ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சூப்பர் ஸ்டார் பட்டம் பிரச்சனையில் சிக்கிய விஷ்ணு விஷால்.. 'எக்ஸ்' பதிவால் வந்த சிக்கல்!