சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக மட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராகவும் உள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கரோனா காலகட்டத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கமல்ஹாசன் திரை வாழ்விலேயே அதிகபட்ச வசூல் செய்த படமாக விக்ரம் மாறியது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரில் போலி கணக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கிய படம் லியோ. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் வேட்டை நடத்தியது. லியோ படம் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தான் இயக்கும் அடுத்த படத்திற்கான வேலையில் உள்ளார். குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் நான் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். இதைத் தவிர்த்து வேறு எந்த சமூக வலைத்தளங்களிலும் நான் இல்லை. அதனைப் பயன்படுத்தவும் இல்லை. எனது பெயரில் வேறு எதாவது கணக்கு இருந்தால் அதனைப் புறக்கணித்து விடுங்கள், அன் ஃபாலோ செய்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.. இயக்குநர் அமீர் நெகிழ்ச்சி!