சென்னை: சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் திறமையான நடிகர் என்றாலும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார், ஒத்துழைப்பு அளிக்கமாட்டார் என்று குறைகூறும் செய்திகளும் அவ்வப்போது வருவது வழக்கம். இதற்கு பல இயக்குநர்கள் மறுப்பு தெரிவித்து, சரியான நேரத்திற்கு வருவார் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது ’பத்து தல’, ’வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பத்து தலை படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கர்நாடகாவில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இந்தப் படத்திலிருந்து சிம்பு பாதியிலேயே வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக தனது சட்டையை கழற்றி நடிக்க சொன்னதற்காக சிம்பு ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டதாக கூறப்பட்டது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இயக்குநர் கிருஷ்ணா தனது ட்விட்டரில், இது வதந்தி என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.