சென்னை:சென்னையின் தி.நகரில் உள்ள தனியார் திருமண மஹாலில், மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் 9ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று (டிச.23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம், நடிகர் ரமேஷ் கண்ணா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு மற்றும் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இயக்குநர் கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பின்னர் இந்நிகழ்வில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் பேசுகையில், “நானும் கே.பாலச்சந்தர் ரசிகன்தான். பெண் விடுதலை, சமூக விடுதலை உள்ளிட்ட படங்களை அன்றைய காலகட்டத்தில் எடுக்கத் தொடங்கியவர்.
தற்போதுதான் பெண்களை மையமாக வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் பெண்களை மைப்படுத்தி நிறைய படங்களை எடுத்தவர், கே.பாலச்சந்தர் மட்டுமே. இத்தனை விருதுகள் வாங்கிய ஒரே இயக்குநர் கே.பாலச்சந்தர் மட்டுமே.
இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிலை வைப்பதற்கு அரசாங்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார். பின்னர், நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “கே.பாலச்சந்தர்தான் இன்று இருக்கும் பல பேரை வாழ வைத்தவர். அவரால்தான் இன்று பல பேர் நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய இந்த நினைவு நாளில் கலந்து கொண்டு, என்னுடைய பங்களிப்பை ஆற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:ஜி.வி.பிரகாஷ் - பாரதிராஜா காம்போவில் உருவாகும் கள்வன்.. ஹங்கேரியில் பின்னணி இசை தயாரிப்பு!