சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல அசாத்திய நடிகர்களை உருவாக்கி, திரைத்துறையில் யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர், இயக்குநர் கே.பாலச்சந்தர். அப்படி தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இயக்குநர் கே.பாலச்சந்தர், தனது 84வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். இந்நிலையில், இயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று (டிச.23) அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.
அதாவது, தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை புரட்சிகரமாக வடிவமைத்து, பல சிறந்த படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கிராம அதிகாரி என்பதால், அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார்.
ஆனால் சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த கே.பாலச்சந்தர், தனது 12வது வயதிலேயே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா மீது மிகுந்த ஆசை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடரந்து, சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி விலங்கியல் முடித்த இவர், கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக் கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம்பெறும்.
சென்னை ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து, நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர். ஆங்கிலத்தில் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இவர் இயக்கிய நாடகங்களில் 'நீர்க்குமிழி', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. எம்ஜிஆர் நடித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்துக்கு வசனம் எழுதி, தனது சினிமா வாழ்க்கையை 1964-இல் துவங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'நீர்க்குமிழி' மகத்தான வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து 1981-இல் 'கவிதாலயா' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவான படங்களைக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர். இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த், நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி., சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.