'துணிவு படத்தில் எது துணிவு? என்ன துணிவு?:படத்தில் துணிவு என்பது அஜித் சாரின் கதாப்பாத்திரம் தான். அதற்காக தான் 'நோ கட்ஸ், நோ குளோரி' (No Guts, No Glory) என்னும் டேக் லைன் வைத்திருக்கிறோம். என்ன துணிவு, எதற்கு துணிவு வேண்டும் என்பது தான் படத்தின் கதை.
துணிவு பண மதிப்பீடு பற்றிய படமா?:பணத்தை மதிப்பீடு பண்ணும் படம் இல்லை. இது சீரியசான படம் இல்லை. எல்லா விஷயங்களையும் சுவாரசியமாக ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறோம். அதில் பணத்தை கையாள்வது ஒரு பகுதி ஆகும்.
தொடர்ந்து மூன்று படங்கள், ஒரே நடிகருடன் இயக்குநர் இணைந்திருப்பது குறித்து உங்கள் கருத்து:படத்தில் பணிபுரிபவர்களுக்கு கம்ஃபெர்ட்டாக உள்ளதா என்பது தான் முக்கியம். நானும் அஜித் சாரும் முதலில் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்தோம், அதேபோல் தான் வலிமை மற்றும் துணிவு படங்களையும் உருவாக்கியுள்ளோம்.
செட்டில் நடிகர் அஜித் எப்படி.. உங்களுக்கு அவருடனான நெருக்கம் என்ன?அவர் ஒரு ஸ்டார் போன்றே நடந்துகொள்ள மாட்டார். பக்கத்து வீட்டு ஆள் போல தான் இருப்பார். செட்டிலும் அவர் ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். அவர் சொல்வதில் முக்கியமான விசயம் இருக்கும் என்று நான் நம்புவேன். அதே போல் தான் அவரும் என்னை நம்புவார்.
சினிமாவில் அரசியல்.. அரசியலில் சினிமா உங்கள் பார்வை என்ன?:எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. அதேபோல், ஒரு விஷயத்தை ஜெனரலைஸ் செய்யக்கூடாது. அதாவது ஒரு துறையில், ஒருவன் தவறு செய்தால் அந்த துறையே தவறு எனக் கூறக்கூடாது. அது அந்த துறையில் சேர நினைப்போரைப் பாதிக்கும். உதாரணத்திற்கு அரசியல் ஒரு சாக்கடை என கூறிக்கொண்டே இருந்தால், அதில் யாரும் புதிதாக சேர மாட்டார்கள். அப்போது அது இன்னும் சாக்கடையாக தான் மாறிக்கொண்டிருக்கும். எனவே, ஒரு நபர் தவறு செய்தால் துறையையே குற்றம் சாட்டக்கூடாது.
படத்தில் நிறைய யூட்யூப் நட்சத்திரங்கள் ஏன்:படத்தில் வரும் சிறு கதாபாத்திரங்களும் எளிதாக மனதில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தான்.