தொடர்ந்து ஒரெ விதமாக கமர்ஷியல் படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், இப்படியும் படம் எடுக்கலாம் என நாம் பெரிதும் காணாத வாழ்வியலை நமக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பாலா. தமிழ் ரசிகர்களின் ரசனையை குறுகிய பார்வையினை மென்மேலும் அகலப்படுத்தியவர். சினிமா ரசிகர்களை மீண்டும் யதார்த்த உலகுக்குள் அழைத்துச் சென்ற இயக்குநர் பாலாவுக்கு இன்று (ஜூலை 11) 56 ஆவது பிறந்தநாள்.
காலம் காலமாக, `யாருடைய படத்தில் நடிக்க ஆசை?' என்ற கேள்விக்கு நடிகர், நடிகைகள் பெயரை பரிந்துரை செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி, `இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும்' என்ற வார்த்தைகளை உதிர்க்க வைத்தவர் பாலா.
ஓங்கி ஒலித்த குரல்:`சேது', `நந்தா', `பிதாமகன்', `நான் கடவுள்', `அவன் இவன்', `பரதேசி', `தாரை தப்பட்டை' என தொடர்ந்து தன் படங்களில் மனித உணர்வுகளைக் காட்சிப்படுத்தி சக மனிதர்களின் வலியை பார்வையாளர்களுக்கும் கடத்திய உன்னத கலைஞன் பாலா. எத்தனை எத்தனையோ இயக்குநர்கள் இங்கு மக்களால் ரசிக்கும்படி படம் எடுத்துள்ளனர், ரசிகர்களால் போற்றப்பட்டும் உள்ளனர்.
ஆனால் வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். அதுவும் வேற்று மொழிகளில் படங்களை இயக்காமலே, அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவர் இயக்குநர் பாலா. அனைத்து மக்களாலும் பெரிதும் பாரட்டப்பட்ட ’கேங்க்ஸ் ஆஃப் வாஸிபூர்’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யாப், படத்தின் ஆரம்பத்தில் பாலா, சசிகுமார் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
போராட்டத்திற்கு பின்கிடைத்த முதல் வெற்றி:’சேது’ படத்தின் வெற்றி குறித்து அனைவருக்கும் தெரியும், ஆனால் அதற்கு பாலா இழந்தது ஏராளம். படத்தின் கிளைமாக்ஸ் மாற்ற வேண்டும் என்றனர், ஆனால் முடியாது என்று பாலா மறுத்துவிட்டார். பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி முதல் வாரம் கூட்டமே இல்லை.