சென்னை: இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இயக்குநர் ஷங்கரிடம் சினிமா பயின்ற இவர் ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவரது படத்தில் மேக்கிங் மற்றும் திரைக்கதை சிறப்பாக இருப்பதால், படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று விடுகிறது.
நடிகர் விஜய்யை வைத்து ’தெறி’, ’மெர்சல்’ , ’பிகில்’ என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை எடுத்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமிழ் இயக்குநர் ஒருவர் இந்தி வரை சென்று அங்குள்ள முன்னணி நடிகரை இயக்குவது தமிழ் சினிமாவுக்கு பெருமையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் அட்லீயும் நடிகை பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான பிரியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.
தனது வாரிசின் பெயரை அறிவித்த இயக்குநர் அட்லீ தம்பதியர்!
இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியர் தங்களது குழந்தையின் பெயரை சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்ததை ஒட்டி பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது குழந்தையின் பெயர் என்ன என்பதை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி குழந்தைக்கு மீர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்த அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். தற்போது திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அட்லீ ஜவான் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணைந்தால் மீண்டும் விஜய்க்கு மிகப் பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Adipurush: ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!