தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.. இயக்குநர் அமீர் நெகிழ்ச்சி! - director ameer issue

21 years of Mounam Pesiyathey: ’மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் அமீர் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மௌனம் பேசியதே 21 ஆண்டுகள் நிறைவு
மௌனம் பேசியதே 21 ஆண்டுகள் நிறைவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 11:35 AM IST

சென்னை: அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நந்தா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ’மௌனம் பேசியதே’. இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. மௌனம் பேசியதே திரைப்படம், சூர்யாவின் திரை வாழ்வில் முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது.

இந்த நிலையில், மௌனம் பேசியதே வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தனர்.

அப்போது நான் சோர்ந்துவிடாமலும், துவண்டு விழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு அளித்த தமிழ்நாடு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையை நோக்கி, சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து, உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றி.

மேலும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில் நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் குறிப்பாக "மெளனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வேட்டையாட வரும் 'வேட்டையன்' - ரஜினிகாந்த் 170வது பட தலைப்பு வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details