சென்னை:தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் விளங்கியவர் டி.பி.கஜேந்திரன் (வயது 72). ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து, முதல் முறையாக கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குநர் விசுவை போலவே குடும்பம் சார்ந்த கதைக் களங்களில் படங்களை இயக்கி வந்தார் கஜேந்திரன். ஏறத்தாழ 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். அதில் எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன், தாயா தாரமா, சீனா தானா உள்ளிட்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இயக்குநராக அறிமுகம் ஆகும் முன்னரே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த டி.பி.கஜேந்திரன், அவர் இயக்கிய படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி வந்தார். வில்லு, குசேலன், சந்திரமுகி போன்ற பல படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களாக டி.பி.கஜேந்திரன் நடித்துள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெளியான காலகட்டத்தில் மக்களால் பெரும்பாலும் ரசிக்கப்பட்டன.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டி.பி.கஜேந்திரன் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.