நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் 72 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், பாண்டியராஜன், லிங்குசாமி, கே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,
“எவ்வளவோ நிகழ்ச்சிகளில் மேடைகளில் நான் பேசி இருக்கிறேன். என்னிடம் நிறைய சிஷ்யர்கள் இருந்தனர். நிறைய இயக்குநர்கள் தற்போது உள்ளனர். அதில் துருவ நட்சத்திரம் போல இருப்பவன் பாக்யராஜ். அடிப்படையில் மிகவும் பாசம் உள்ளவன். முதன் முதலில் என்னிடம் உதவி இயக்குனராக சேரும் போது சந்தேகம் இருந்தது. இவன் ஆளைப் பார்த்தால் இப்படி இருக்கிறான் ஆனால் அவனது எழுத்து இப்படி இருக்கிறதே என அசந்து விட்டேன்.
என்னுடைய பெரும்பாலான படங்களுக்கு கதை வசனம் யாராக இருந்தாலும், பாக்யராஜ் வார்த்தைகள் இல்லாமல் இருந்தது இல்லை. எந்த இடத்தில், எந்த வார்த்தையை போட வேண்டும் என அற்புதமாக எழுதுவான். பாக்யராஜ் என்று சொன்னால் அவரது வசனங்கள் தான் எனக்கு நினைவுக்கு வரும். இதுவரை நான் நட்ட செடி எந்த பழுதும் இல்லாமல் வளர்ந்துள்ளது. நட்டது நான் வளர்ந்தது அவன்.
இன்றைக்கு வரைக்கும் என் பெயரை உச்சரிக்காதவன். எங்கள் இயக்குநர் என்று தான் சொல்லுவான். அந்த மரியாதைக்கு தலை வணங்குவேன். இன்னும் இளமையாக இருக்கான். நல்ல கலை குடும்பம். முன்பு போல பேச முடியவில்லை. சினிமா ஒரு அற்புதமான கலை குடும்பம் நாம் எங்கு இருந்தாலும் வந்து கொண்டு சேர்த்து விடுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னும் அந்த ஈரத்துடன் இருக்கிறான் அதுதான் கலைஞன். இன்றும் பாக்யராஜ் வேண்டும் தயாரிப்பார்களுக்கு.