சென்னை:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் தவிர்த்து விவசாயம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பிலும் அவர் களம் இறங்கி உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் புதிய தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.
இதுவே, தோனி தயாரிக்கும் முதல் திரைப்படம் என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றுமொரு குஷியாக உள்ளது. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு லெட் கெட்ஸ் மேரிட் (Lets Get Married) அதாவது எல்ஜிஎம் (LGM) என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இந்தத் திரைப்படம் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் முதல் தயாரிப்பாகும்.
எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இதற்காக படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாட்ட மனநிலையில் பகிர்ந்து கொண்டனர்.