சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்த தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 18) பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை பயிற்சியாளராக யானிக் பென் பணிபுரிய உள்ளார். ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிய உள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநரான சேகர் கம்முலா, ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இது தனுஷ் நடிக்கும் 51வது திரைப்படமாகும். மேலும் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.