நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என தனது நடிப்பாற்றல் மூலம் எல்லைகளைக் கடந்து வெற்றி வாகை சூடி வருகிறார். இவர் இந்த ஆண்டு ஃபுட் டெலிவரி ஊழியராக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி பிளாக் ஃபஸ்டராக அமைந்தது.
இது மட்டுமின்றி, ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய 'கிரே மேன்' என்ற திரைப்படம் வாயிலாக, முதல்முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதிவு செய்தார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் 'வாத்தி/ சார்', 'கேப்டன் மில்லர்' மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத படம் என அடுத்த ஆண்டும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் IMDb 2022ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தி நடிகை ஆலியா பட்டும், மூன்றாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் நடிகர் ராம்சரண், நடிகை சமந்தா, நடிகர் ஹ்ருத்திக் ரோஷன், நடிகை கைரா அத்வானி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் மற்றும் யஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:பாபா ரீ -ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்