சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர், நடிகர் கவின். தொடர்ந்து அதே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடத்திருந்தாலும், லிப்ட் படத்தில் தன் தனித்துவமான நடிப்பின்மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அறிமுக இயக்குநர் கணேஷ்.கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்க, கவின் உடன் நாயகியாக அபர்ணா தாஸ், கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ''முதல் நீ முடிவும் நீ'' திரைப்படப்புகழ் ஹரீஷ், ''வாழ்'' திரைப்படப்புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரின் நடிப்பும் ரசிகர்களிடயே பெரும் பாராட்டைப் பெற்றது. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கத்தால் இருவருக்கும் குழந்தை பிறக்க, அபர்ணா விட்டுச்சென்ற பின், தனி ஆளாக அக்குழந்தையை கவின் வளர்ப்பார். இந்த கதையை ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு அழகான திரைக்கதை மூலம் வெற்றிப்படமாக கொடுத்திருந்தார், இயக்குநர் கணேஷ்.கே.பாபு.