சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பால் கோலிவுட் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சிம்பு. அவரது அப்பா டி.ராஜேந்தர் என்னும் அஷ்டாவதானி சிம்புவை குழந்தையில் இருந்தே அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு சிறந்த நடிகராக உருவாக்கினார். அதன் பயன்தான் சிறு வயதிலேயே பாடல் எழுதுவது, இயக்குவது என பல்வேறு திறமைகளும் படைத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளவர் நடிகர் சிம்பு.
ஆனால் சில பல பிரச்னைகளால் தன்னுடைய உயரம் எது என்று தெரியாமல் இன்னும் அப்படியே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி வருகின்றனர். அதை எல்லாம் "பத்து தல" (Pathu Thala) திரைப்படம் மாற்றும் என்றும், அவரது திரை வாழ்க்கையை இந்த பத்து தல படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று பேசி வருகின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் பத்து தல.
இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இது கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "மஃப்டி" என்ற படத்தின் ரீமேக்காகும். படம் தொடங்கிய முதலே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து ஒரு வழியாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்றும் மணல் மாஃபியா தலைவராக வருகிறார். இப்படம் நாளை (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.