சென்னை:நடிகர் சரத்குமார் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் இளைய தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்த நடிக்கவும் தயங்குவதில்லை. அந்த வகையில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் தற்போது இணைந்துள்ள படம் 'கிரிமினல்' (Criminal).
இப்படத்தை தக்ஷிணா மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தை பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி கூறுகையில், "எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த போது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன். அவற்றை நிறைவேற்றுவதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில், ஒரு டீக்கடையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் 'கிரிமினல்' ஆரம்பித்த புள்ளி. தயாரிப்பாளர்களான பர்சா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இந்தக் கதையைக் கேட்டபோது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைக்குள் கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் வர படம் இன்னும் பெரிதாகியது. படத்தில் எந்த விதத்திலும் தலையிடாமல் எனக்கு தேவையான சுதந்திரத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். மிகப் பெரிய பொருட்செலவில் படம் சிறப்பாக வந்துள்ளது என தெரிவித்தார்.