சென்னை: ஶ்ரீ மகாநந்தா சினிமாஸ் சார்பில், முருகேசன் தயாரித்துள்ள 'கம்பெனி' படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஏப். 8) நடைபெற்றது. இவ்விழாவில் 'கம்பெனி' படத்தின் இயக்குனர் தங்கராஜன், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் தாணு, கே.ராஜன், ஜாக்குவார் தங்கம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கே.ராஜன், "தயாரிப்பாளர்களை தற்போது காணவில்லை. நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை. டப்பிங் முடிவதற்குள் முழு சம்பளமும் வாங்கிவிட்டு செல்கின்றனர். மளிகை கடை வைத்தால் கூட பணம் திரும்ப கிடைக்கும். ஆனால், சினிமாவில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு எதுவும் மிஞ்சுவதில்லை.
கம்பெனி திரைப்பட ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட தற்போது படம் எடுக்க முன்வருவதில்லை. தமிழ்நாடு மக்கள் நல்ல படங்களை பார்க்க விரும்புகின்றனர். டிவியில் இருந்து தற்போது நடிக்க வந்த நபர் முழு சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கேட்கிறார்.
மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் இருந்தேன். ஆனால் எனது பணம் ரூ. 12 கோடி சினிமாவில் உள்ளது. கடன் கொடுத்தேன். ஆனால் யாரும் திருப்பித்தரவில்லை. திருட்டு விசிடி பிரச்சனையில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள். அது குறித்து எனக்கு கவலை இல்லை” என்றார்.
இதையடுத்து, ஜாக்குவார் தங்கம், "படம் முடிந்து ஆடியோ விழா முடிந்துதான் மீதி சம்பளம் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சட்டம் இயற்றினால்தான் எல்லாரும் ஆடியோ விழாவிற்கு வருவார்கள்" எனத் தெரிவித்தார்.
இறுதியாக பேசிய இயக்குநர் பாரதிராஜா, "சினிமா வாய்ப்புக்காக வடபழனியில் தெருத்தெருவாக அலைந்தவன்தான் பாரதிராஜா. சினிமாவை காதலித்தேன். சினிமா பின்புலம் இன்றி வளர்ந்தவர்கள் நாங்கள். புதுமுகங்களை உருவாக்குவதில் பெருமை எனக்கு. யாரையும் பழி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. வலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: நீண்.....டு கொண்டே போகிறதா "வெந்து தணிந்தது காடு": படப்பிடிப்பு முடியுமா? முடியாதா?... குழப்பத்தில் சிம்பு!