தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கமலின் வணிகப் படங்கள் - ஒரு பார்வை!

திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி வரும் நடிகர் கமல்ஹாசனின் வணிகப் படங்கள்... ஒரு பார்வை...

கமலின் வணிகப் படங்கள் - ஒரு பார்வை!
கமலின் வணிகப் படங்கள் - ஒரு பார்வை!

By

Published : Jun 2, 2022, 3:48 PM IST

’கமல்ஹாசன்’ இந்தப் பெயரை கேட்டாலே அனைவரின் நினைவுக்கு வருவது நடிப்பு மட்டுமே. குழந்தைப் பருவம் முதல் தொடங்கிய இந்த நடிப்பு அரக்கனின் பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சினிமாவில் உயரே பறந்து கொண்டு இருக்கிறது. என்னதான் இப்போது 500 கோடி, 1000 கோடி என வசூல் சண்டை நடந்துகொண்டு இருந்தாலும் அதற்கு எல்லாம் செவி கொடுக்காமல் தனது வாழ்க்கையை சினிமாவுக்காக மட்டுமே அர்ப்பணித்தவர், கமல்ஹாசன். நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் எடுத்திருக்கிறார்.

கமலின் வணிகப் படங்கள் - ஒரு பார்வை!

அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தோல்வியும் கண்டிருக்கிறார். ஆனால், துவண்டுபோனது கிடையாது. சம்பாதித்த அனைத்தையும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்தவர். இன்று வணிகப்படங்களுக்கு பெயர் போனவர் என்றால் ரஜினியும், விஜயும்தான். ஆனால், கமல் தனது ஆரம்ப காலங்களில் இதனை அநாயாசமாக சாதித்தவர்.

கமலின் வணிகப் படங்கள் - ஒரு பார்வை!

1959ஆம் ஆண்டு கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ’களத்தூர் கண்ணம்மா’ படம் வணிகரீதியிலான வெற்றியைப் பெற்றதோடு கமலுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. கமல் முதன்முதலாக நாயகனாக நடித்த ’பட்டாம்பூச்சி’ என்ற படமும் கமர்ஷியல் வெற்றிதான். அதன்பிறகு, சினிமா விதிகளை மீறி வித்தியாசமாக கமல் நடித்த அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, 16 வயதினிலே ஆகிய படங்களும் வணிகரீதியில் வெற்றிபெற்றவை தான். இப்படி தனது ஆரம்ப காலத்திலேயே ஏராளமான வணிக வெற்றிப்படங்களை கொடுத்தவர், கமல்.

கமலின் வணிகப் படங்கள் ஒரு பார்வை!

குறிப்பாக 70, 80-களில் சிகப்பு ரோஜாக்கள்(1978), நினைத்தாலே இனிக்கும்(1979), கல்யாணராமன்(1979), அதேபோல் தெலுங்கில் கமல் நடித்த மரோசரித்ரா (1979) பிரமாண்ட வெற்றிபெற்றது. இதே காலகட்டத்தில்தான் கமல் உணர்ச்சிகள்(1976), அவள் அப்படித்தான் (1978) போன்ற பரீட்சார்த்த முயற்சிப் படங்களிலும் நடித்தார்.

1980-களில் கமல் நடிப்பில் லாஜிக் எதிர்பார்க்காத வணிக மசாலாப் படங்கள் ஏராளமானவை வரத்தொடங்கின. சகலகலா வல்லவன்(1982), குரு(1980), வறுமையின் நிறம் சிவப்பு(1980), மூன்றாம்பிறை(1982), வாழ்வே மாயம்(1982), சலங்கை ஒலி(1983), காக்கிச்சட்டை(1985), புன்னகை மன்னன்(1986), நாயகன்(1987), அபூர்வ சகோதரர்கள்(1989), வெற்றி விழா(1989) உள்ளிட்டப் படங்கள் கமல்ஹாசனை வசூல் சக்கரவர்த்தியாக உயர்த்தியது. அதேபோன்று 90-களில் சிங்கார வேலன்(1992), தேவர் மகன்(1992), இந்தியன் (1996) கிரேசி மோகனின் வசனத்தில் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன்(1990), சதிலீலாவதி(1995), அவ்வை சண்முகி(1996) ஆகியவையும் கமர்ஷியல் வெற்றிப்படங்களே.

கமலின் வணிகப் படங்கள் ஒரு பார்வை!

கமலின் இந்த தொடர் வெற்றிக்கூட்டணி புத்தாயிரத்திலும் தொடர்ந்தது. பம்பல் கே சம்பந்தம்(2002), பஞ்ச தந்திரம்(2002), வசூல்ராஜா எம்பிபிஎஸ்(2004) போன்ற படங்களும் கமல் இயக்கி நடித்த ’விருமாண்டி’ படமும் கமர்ஷியலாக கல்லாகட்டியது. வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் போன்ற படங்களும் வணிகரீதியில் பிரமாண்டமான வெற்றிபெற்றன.

அதன்பிறகு அரசியல், சின்னத்திரை என பயணித்த கமல்ஹாசன் கடந்த 10 ஆண்டுகளில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் விஸ்வரூபம், பாபநாசம் படங்கள் வெற்றிப்படங்களே. வெறும் கமர்ஷியல் நடிகராக மட்டுமே இருந்திருந்தால் ’ராஜபார்வை’, ’ஹேராம்’, ’அன்பே சிவம்’, ’மகாநதி’, ’குணா’, ’ஆளவந்தான்’ போன்ற படங்கள் நமக்கு கிடைத்திருக்காது.

ஒரு கலைஞன் என்பவன் வெறும் வணிகப்படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருந்தால், காலப்போக்கில் காணாமல் போய்விடுவான். கலைப்படங்களும் பரீட்சார்த்த முயற்சிகளுமே ஒரு கலைஞனை மொழிகடந்தும் தன் வாழ்நாள் முடிந்தும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கச் செய்பவை. இத்தனை கமர்ஷியல் ஹிட் கொடுத்திருந்தாலும் சினிமா மீதான காதலால் கமர்ஷியல் படங்களில் இருந்து, தனது பார்வையைத் திருப்பி நம்மை கலைப்படங்களின் மூலம் மகிழ்வித்தவர், கமல்ஹாசன்.

அதுதான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அழகும் கூட. நீண்ட வருடங்களுக்குப்பிறகு ’விக்ரம்’ படத்தின் மூலம் மீண்டும் தனது பாய்ச்சலைத் தொடங்கியுள்ளார், கமல்ஹாசன். நிச்சயம் கமல்ஹாசன் ஜெயிக்கும் குதிரை தான் எப்போதும்.

இதையும் படிங்க: விக்ரம் முன்பதிவு "சும்மா கிழி"!

ABOUT THE AUTHOR

...view details