சென்னை:தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என அனைவரும் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து பல துணை காமெடி நடிகர்கள் நடித்து வந்தனர். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடன் ஒரு குழுவை வைத்துக்கொண்டு அவர்களுக்கு படங்களில் வாய்ப்பு வழங்கி வந்தனர்.
இதனால் அந்த சின்ன நடிகர்களின் வாழ்க்கை எந்தவித பாதிப்பும் இன்றி இருந்து வந்தனர். அதன் பின்னர் காலப்போக்கில் அந்த பெரிய நடிகர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டு பின்னாளில் காணாமல் போயினர். இதனால் சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் எனவும் கூறலாம்.
தற்போது எல்லாம் பழைய காமெடி நடிகர்களை பார்ப்பதே மிகவும் குறைந்துவிட்டது. சிலர் உயிரிழந்த நிலையில் பலரும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சிலர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த பாவா லட்சுமணன் தற்போது உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.
நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனுக்கு 55 வயதாகும் நிலையில், இவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. அதனால் அவர் சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் அதிகமானதால், அவரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டு உள்ளது. அவர் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.