சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (செப். 18) இரவு அவர் உறங்கச் சென்ற நிலையில், இன்று காலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, மீரா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்த விஷயம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரும் துயரத்தில் உள்ள விஜய் ஆண்டனிக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சரத்குமார், விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், "விஜய் ஆண்டனி, ஃபாத்திமா தம்பதியின் மகள் மீரா உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. இறைவன் விஜய் ஆண்டனிக்கு இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியை தருவார் என நம்புகிறேன். மீராவின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்து உள்ளார்.