சென்னை:பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன், ரேவதி ஆகியோர் நடித்து கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், மண் வாசனை. இப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது அனுபவங்களை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இன்றுடன் நாற்பது ஆண்டுகள் பாரதிராஜாவின் மண்வாசனை வெளிவந்து ”ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்” என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது. "என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டு வேலை செய்துவிடக்கூடாது, அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன்" என்பது விளக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது. வெட்கப்பட ஆளுமில்லை, மஞ்சளுக்கும் வேலையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
’திருப்பதி’ படப்பிடிப்பில் பைக் ஓட்டிய அஜித்:ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் எண்ணற்ற படங்கள் வெளி வந்துள்ளன. தற்போது திரைப்படத் தயாரிப்பை குறைத்துக் கொண்டாலும் ஏவிஎம் ஸ்டுடியோ சென்னை வடபழனியில் இப்போதும் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. அங்கு ஏவிஎம் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது. ஏவிஎம் தயாரித்த படங்களில் நடிகர்கள் பயன்படுத்திய கார், பைக் மற்றும் ஏராளமான பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ஏவிஎம் தயாரிப்பில் அஜித் நடித்த திருப்பதி என்ற படத்தை பேரரசு இயக்கியிருந்தார். அப்போது அஜித் ஓட்டிய பைக்கை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப் பரிசளித்த பி. வாசு:தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 60க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'சந்திரமுகி 2' படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது தனது உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப்பை பி.வாசு பரிசளித்தார்.
பி.வாசு இயக்கும் 65வது படமான 'சந்திரமுகி 2'-இல் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார்.
இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாளான நேற்று, அவரை ஜி.கே.எம்.தமிழ்குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் பி.வாசுவின் உதவியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது இயக்குநர் பி.வாசு, தன்னுடைய உதவி இயக்குநர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்தியின் ஜப்பான் டப்பிங் வீடியோ:நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து, கார்த்தி தற்போது இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கியது. இதனை படக்குழு வீடியோ மூலம் அறிவித்தது. தற்போது இந்த வீடியோ யூடியூப்பில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட திரைப்பட போஸ்டர்:தேவா இசையில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகவும் ரெடின் கிங்ஸ்லீ காமெடியனாகவும் நடித்துள்ள "வா வரலாம் வா" திரைப்படத்தின் First Look வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "வா வரலாம் வா". எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி.ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.
இதையும் படிங்க:Jawan box office collection Day 10: 400 கோடி வசூல் செய்த ஜவான்!