சென்னை:தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரொமான்டிக் திரைப்படம் 'குஷி'. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா இணைந்து நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'மஜிலி' என்ற படத்திற்குப் பிறகு, இயக்குநர் சிவா நிர்வாணா, சமந்தா கூட்டணியில் இணையும் இரண்டாவது திரைப்படம் 'குஷி' என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
புலவர் ராசு மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல்:தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான புலவர் இராசுவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து, உலகிற்கு பல அரிய வரலாற்று தகவல்களை அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும், அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த அறிவிப்பை தனது உழவன் ஃபவுண்டேஷன் வாயிலாக அவர் தெரிவித்தார்.
பான் இந்தியா படம் இயக்கும் அர்ஜுன்:நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15வது படத்தை, அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.