சென்னை: இன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைவரும் தனது சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பொது மக்களுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நடிகை ராதிகா, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் தங்களது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளி வரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் நடிகர் தனுஷ், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் தனது குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது குடும்பத்தாருடன் சமீபத்தில் வெளியான அயலான் படத்தின் ஏலியன் கதாபாத்திரம் பொங்கல் கொண்டாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் அவர் இயக்கி வரும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
அதேபோல் மாரி செல்வராஜ் தனது குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடுவது போல் புகைப்படம் வெளியிட்டு, சமூக வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் சென்னை கோடம்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: தலைவா..தலைவா..என அலறவிட்ட கோஷம்! சிந்தனையிலும் வாழ்க்கையிலும் இதுதான் முக்கியம்..! - ரஜினிகாந்த பொங்கல் வாழ்த்து