எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிகுளம் கோயிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவைராணிக்குளம் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அமலா பால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனால் அமலா பால் நுழைவு வாயிலில் இருந்தபடியே தரிசனம் செய்துவிட்டு திரும்பினார். திருவைராணிகுளம் கோயில் நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் ஆர்.வி.பாபு, தனது பேஸ்புக் பக்கத்தில், "மத நம்பிக்கை இல்லாத இந்து ஒருவரை கோயில் நிர்வாகியாக அனுமதிப்பதும், மத நம்பிக்கையுள்ள மாற்று மதத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்காததும் எந்தமாதிரியான தர்க்கம்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல திருப்பதி போன்ற கோயில்களில் பின்பற்றப்படும் வழக்கங்களை திருவைராணிகுளம் கோயில் நிர்வாகமும் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.