சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ படத்திற்கு அனிருந் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தில் இடம் பெற்ற 'நான் ரெடி' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இப்பாடலில் நடன கலைஞர்களாக பணியாற்றிய சுமார் 1300க்கும் மேற்பட்டோருக்கு படக்குழு சார்பில் இருந்து இதுவரை இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட கொடுக்கவில்லை என்று நடன கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து நடன கலைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. லியோ படத்தின் ’நான் ரெடி தான்’ பாடலுக்கு நடனமாடுவதற்காக சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் ஆடிஷன் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1300 நடன கலைஞர்கள் 8 நாட்கள் கால்ஷீட்டில், ஒரு நபருக்கு 20,000 ரூபாய் பேமெண்ட்டில் நடனமாட வேண்டும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பனையூரில் நடைபெற்ற இந்த பாடலுக்கான படப்பிடிப்பு 8 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களிலேயே பாடலின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். அதேபோல், சொல்லப்பட்ட 8 நாட்களில் 2 நாட்கள் போக மீதி 6 நாட்களுக்கு 16000 ரூபாய் மட்டும் சம்பளம் வழங்குவதாகவும், அதற்காக ஒவ்வொருவரும் அவரவர் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்குமாறும் படக்குழு சார்பில் நடன கலைஞர்கள் வங்கி விவரங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்து 4 மாதங்கள் ஆகியும், திரைப்படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதுவரை 1300 மேற்பட்ட நடன கலைஞர்களுக்கு ஒரு ரூபாய் கூட படக்குழு சம்பளம் தரவில்லை என்று தெரிவிக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் நான் ரெடி பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு 6 நாட்களுக்கு சுமார் 24 ஆயிரம் ரூபாய் ஊதியமாக தெரிவித்திருந்த நிலையில் ஒரு சிலருக்கு 7000 ரூபாயும் ஒரு சிலருக்கு 2000, 3000 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும் நடன கலைஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.