சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான "வாத்தி" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் தனது முதல் படமான 'ராக்கி' திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘சாணிக்காயிதம்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்.
தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கேப்டன் மில்லர் திரைப்படம் 1930-40 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.