சென்னை:அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளது. இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமீபத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் கேப்டன் மில்லர் படக்குழுவினர் மற்றும் அரங்கில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரையுலகின் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சினிமாவில் பெரும் முயற்சிக்குப் பிறகு நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், இன்றும் அவர் உதவும் குணத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.