ஹைதராபாத்:இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் உலகநாயகன் கமலஹாசனும், தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் சீசன் 7 தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7ன் பைனல்ஸ் கடந்த ஞாயிற்று கிழமை முடிவடைந்தது. தெலுங்கு பிக் பாஸில் பல்லவி பிரசாந்த் மற்றும் அமர் தீப் என இரண்டு போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பல்லவி பிரசாந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் முன்பு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின் சக போட்டியாளரான அமர் தீப் அவர் குடும்பத்துடன் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் முன்பு காரில் சென்ற போது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் அமர்தீப்பின் கார் மீது கற்களை எறிந்தும் கம்பியால் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த சீசனின் சக போட்டியாளராக இருந்த அஸ்வினியின் கார் கண்ணாடிகளையும் பிரசாந்தின் ரசிகர்கள் உடைத்துள்ளனர். மேலும், 5 ஆர்டிசி பஸ்களின் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பிற்காக வந்த ஜூப்ளி ஹில்ஸ் காவல் துறை அதிகாரி மோகன் குமார் காரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்தின் ரசிகர்கள் அமர்தீப், அஸ்வினி அகியோரின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.