சென்னை:சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள 'ஹே சகோ ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே.ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள்.
பெரிய நடிகர்களால் எந்தப் பயனும் இல்லை..!: பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ”யோகேஸ்வரன் பாடியதையும் ஆடியதையும் பார்த்தபோது அற்புதம் என்று சொல்லத்தோன்றியது. இறைவனின் அருள் பெற்று வந்த குழந்தை அவன். பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள் படத்தை வாழ்த்துவதற்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால், சிறிய படங்களை வாழ்த்துவதற்குப் பெரும்பாலும் யாரும் வருவதில்லை. நாங்கள் தான் வருவோம்.
பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது. 100 கோடி, 200 கோடி வாங்கும் நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க முடியாது. அவர்களால் சினிமாவை வளர்க்கவே முடியாது. சினிமா வாழ்வது சிறிய படத்தயாரிப்பாளர்களால் தான். ஒரு சிறிய தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் நூறு தயாரிப்பாளர்கள் திரையுலகில் உள்ளே வருவார்கள். ஆயிரம் குடும்பங்கள் திரையுலகில் வாழும்.
தெலுங்கு பக்கம் போகும் ஹீரோக்கள்: அதனால் தான் நாங்கள் சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும், வளர வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதெல்லாம் நம் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகை வாழவைக்கப்புறப்பட்டுவிட்டார்கள். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாரும் பெரிதாக வளர்ந்துவிட்டதுபோல், இவர்கள் தெலுங்கு பக்கம் போகிறார்கள். இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர் குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால், நானும் பேரரசுவும் சின்னப்படங்களையும் சின்ன தயாரிப்பாளர்களையும் வாழ்த்துகிறோம். அதனால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.