சென்னை: 'இயக்குநர் இமயம்' என அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா கடந்த 23ஆம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்கிய நிலையில் உடலில் நுரையீரலில் சற்று நீர் தேங்கியுள்ளது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன.
தொடர்ந்து இரண்டு நாட்களாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சற்றே முன்னேற்றம் அடைந்த நிலையில், தொடர் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கக்கூடிய எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்குப் பிற்பகல் மாற்றப்பட்டார்.
பாரதிராஜவின் குடும்ப நண்பர் டாக்டர் நடேசன், ஏசி சண்முகம், கவிஞர் வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் குடும்பத்தினர் ஆலோசனையின்படி தற்போது எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாரதிராஜா தியாகராய நகர் மருத்துவமனையில் இருந்து மாற்றப்படும்பொழுது, அவருடனேயே கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு, ஏசி சண்முகம் உட்படப் பலரும் மருத்துவமனை வருகை தந்தனர்.