தென்னிந்திய படங்கள் பான்-இந்திய சந்தையை உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது தயாரிப்பு முடிந்த தமிழ்த் திரைப்படமான "ஷாட் பூட் த்ரீ" தென் கொரியாவில் உள்ள சியோலில் ’ஐ.சி.ஏ.எஃப்.எஃப்’(ICAFF) திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது.
தென் கொரியா, உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது. ஐ.சி.ஏ.எஃப்.எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் திரைப்படம் விருதை வென்றுள்ளது.
விலங்குகள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, இப்போது குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படுகின்றன. எனவே இந்தத் திரைப்பட விழா செல்லப்பிராணிகள் மேல் நாம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கொண்டாடுகிறது. விழாக் குழுவினர், இயக்குநருக்கு எழுதிய பாராட்டு மடலில் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.
மிக அற்புதமான மற்றும் ஆரோக்கியமான கதையுடன் கூடிய திரைப்படம். குழந்தைகள் மற்றும் நாய்களைப் பற்றிய இந்தியப் படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. படத்தின் கருப்பொருள் எங்கள் ICAFF திரைப்பட விழாவின் நோக்கம் மற்றும் குறிக்கோளை மனப்பூர்வமாக பூர்த்தி செய்தது. மேலும் இந்த பரிசை உங்களுக்கு வழங்குவது என்பது அனைத்து நடுவர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.