சென்னை:1939ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள தமிழ்க் குடும்பத்தில் உதிக்கிறது ஒரு ஒளி. அந்த ஒளி கேமரா ஒளியாக மாற, புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு பயில்கிறது. முதலில் மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கிய இந்த ஒளி, தனக்கு சினிமா மீது தாக்கம் ஏற்படுவதற்கு சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலிதான் காரணம் எனவும் கூறி உள்ளது.
இந்த நிலையில், செம்மீன் படப்புகழ் ராமு காரியத், அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இந்த இலங்கை தமிழ் ஒளியை அழைத்தது. இந்த அழைப்புதான், 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள அரசின் மாநில விருதை இந்த இலங்கை ஒளிக்கு கொடுத்து, பாலுமகேந்திரா என்னும் விளக்கை எரியச் செய்தது.
இதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா. கெ.எஸ்.சேதுமாதவனின் சுக்கு, ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி, சட்டக்காரி மற்றும் பி.என்.மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை இவரது முக்கியமான படங்கள். அதேநேரம், தெலுங்கில் பிரபலமான ‘சங்கராபரணம்’ படத்தை ஒளிப்பதிவு செய்ததும் இந்த அணையா விளக்கான பாலுமகேந்திராதான்.
ஒளிப்பதிவில் பல புதுமைகளை புகுத்திய பாலுமகேந்திரா, இயற்கை ஒளி கொண்டே காட்சிகளையே எடுத்தார். அது அப்போது மிகவும் புதுமையாக பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் கன்னடத்தில் மணிரத்னம் இயக்கிய பல்லவி அனுபல்லவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பாலு மகேந்திரா. பின்னர் தமிழில் முதல் முறையாக ஒளிப்பதிவு செய்த படம், இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் அசாத்தியமான நடிப்பில் வெளியான முள்ளும் மலரும்.
அதனைத் தொடர்ந்து முதல் முறையாக கன்னடத்தில் ‘கோகிலா’ என்ற படத்தை 1977ஆம் ஆண்டில் இயக்கினார். அப்படத்தில்தான் மைக் மோகன் அறிமுகமானார். அப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் முதல் முறையாக ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தை இயக்கி, சினிமாவில் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அழியாத ஒரு தொடக்கப் புள்ளியாக கவனிக்கத் தொடங்கினார், பாலு.
அன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரின் பால்ய நினைவுகளை அட்டகாசமாக படம் பிடித்து காட்டிய இவர், விடலைப் பருவத்தின் பால்ய உணர்வுகளை மெல்லிய பஞ்சு போல பறக்க விட்டிருந்தார். இவர் இயக்கிய எல்லா படங்களுக்கும் அவரே படத்தொகுப்பு என்பதுதான் அடுத்த ஹைலைட். இது இந்தியாவில் வேறு எந்த இயக்குநரும் செய்யாதது.