சென்னை:இயக்குநர் முத்துக்குமார் இயக்கிய "அயலி" இணையத் தொடர் அண்மையில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் நடிகை அபி நட்சத்திரா, நடிகர் லிங்கா, நடிகர் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். மூட நம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவற்றை கேள்வி கேட்கும் 'அயலி', வெளியானது முதலே அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், அயலி இணையத்தொடரின் வெற்றிவிழா இன்று(பிப்.16) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் முத்துக்குமார், நடிகை அபி நட்த்திரா, நடிகர் லிங்கா, நடிகை லவ்லின், நடிகர் சிங்கம்புலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் லிங்கா பேசும்போது, "உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. அயலி யாராவது முன்பே செய்திருந்தால், இவ்வாறு யாரும் முயற்சி செய்திருக்கமாட்டார்கள். அயலியை வெற்றிபெற வைத்தீர்கள். நன்றி" என்றார்.
விழாவில் பேசிய நடிகை லவ்லின், "அயலி மிகப்பெரிய வெற்றி அடைந்தது உங்களால் தான். இன்னும் பெரிய வெற்றி பெற வேண்டும். வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி" என்றார்.
நடிகை அபி நட்சத்திரா பேசும்போது, "என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் எல்லோருமே உண்மையாக உழைத்தனர்" என்றார்.
விழாவில் நடிகர் சிங்கம் புலி கூறும்போது, "அயலியை மிகப்பெரிய வெற்றியடைய வைத்த உங்களுக்கு மிகப் பெரிய நன்றி. பெண்கள் முன்னேற்றத்திற்கான முதல் படியாக அயலியை கொண்டு சேர்த்துள்ளீர்கள். இது என்னுடைய முதல் ஓடிடி தொடர். இப்படத்தில் நான் காமெடி செய்யலாமா என்று கேட்டால், இயக்குநர் விடமாட்டார்.
நட்சத்திராவிற்கு தேர்வு இருந்ததால் ஒருமாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நான் வேறு நடிகையை போட்டு எடுக்க வேண்டியதுதானே என்றேன். இயக்குநர் என்னிடம் வந்து, பெண்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் கதை. நீங்கள் அந்த படத்தில் நடித்த சிறுமியையே படிக்க வேண்டாம் என்கின்றீர்களே? என்றார். பின்னர்தான் இப்படத்தின் கதை தெரியும். இதுபோன்ற கதைகளுக்கு முத்துக்குமார் வாசல் திறந்து வைத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
இயக்குநர் முத்துக்குமார் பேசும்போது, "இது எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கும் நாள். படப்பிடிப்பு தளத்தில் மூத்த நடிகர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டினர். அதுவும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
இப்படம் பார்த்த பிறகு பலரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். படம் பார்ப்பவர்களை அம்மாவுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்ல நினைத்தேன். இப்போது சொல்கிறேன், அனைவரும் அயலியை அம்மாவுடன் அமர்ந்து பாருங்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'அயலி' மூலம் சொல்ல வந்தது என்ன? - இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு நேர்காணல்!