ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் இணையத் தொடர் அயலி. முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் பெண் கல்வி, மூடநம்பிக்கை, பெண் விடுதலை உள்ளிட்டவற்றைப் பேசுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் முத்துக்குமார் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “கரோனாவிற்கு பிறகு நிறைய ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. இப்படத்தை ஓடிடியில் எடுப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. படமாக எடுத்தால் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கும். நான் சொல்ல வேண்டியது அதிகம் இருந்ததால் ஓடிடி அதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனை படமாக எடுத்து இருந்தால் விருதுகள் குவித்து இருக்கும் என்று சொன்னார்கள்.
நிறையப் பேர் இப்படத்தில் வரும் மைய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியில் வைத்துள்ளனர். ஒரு வெப் சீரிஸ் இந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்து உள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது. படமே அடிப்படையில் குழந்தை திருமணம் அதில் உள்ள பிரச்சினைகளைப் பேசுகிறது. கரோனா காலகட்டத்தில் குழந்தை திருமணம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.