சென்னை:இன்று நேற்று நாளை என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். வேற்று கிரகவாசியை மையமாகக் கொண்ட அறிவியல் படமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ரகுல் பீர்த்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சிஜி பணிகள் முடியாததால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நீண்ட வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் படம் நாளை (ஜனவரி 12) வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கேஜே ராஜேஷ் வாங்கிய ரூ.85 கோடி கடனை திருப்பித் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று கடன் கொடுத்தவர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு பைனான்ஸியர்களிடம் தயாரிப்பாளர் ராஜேஷ் கடன் வாங்கியுள்ளார்.