சென்னை: பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, "பருத்திவீரன்" படம் மூலம் தேசிய விருது அங்கீகாரம் பெற்ற நடிகை பிரியாமணி, பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, "டிஆர்56" (DR 56) என்ற திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ள இப்படத்தில், பிரவீன் ரெட்டி கதை - திரைக்கதை எழுதி, நாயகனாகவும் நடித்துள்ளார். ஹரி ஹரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தமிழ், கன்னட மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்தும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.
'கேஜிஎஃப்', 'காந்தாரா' படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் இப்படத்திற்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார். 'சார்லி 777' படத்துக்கு இசையமைத்த நோபின் பால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், "டிஆர்56" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய நடிகை பிரியாமணி, "தமிழில் 'சாருலதா' படத்திற்கு பிறகு நான் நடித்து வெளிவரும் படம் 'டிஆர்56' என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன். இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், 'நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும் என்று சொன்னேன்.
நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்திருக்கு. இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே பிரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.