சென்னை: விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படத்தை இயக்கியவர், மனு ஆனந்த். எப்ஐஆர் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சிம்பு உடன் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, கௌதம் கார்த்திக் தற்போது ஆர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
இந்த நிலையில், மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா-கௌதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று(மே.2) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கௌதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர். இது பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாக இருப்பதாகவும், இப்படத்தின் பல சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.