சென்னை: ஆல் இன் ஒன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பார்டர்’ என்ற படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அருண் விஜய், ரெஜினா கெசண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தேசிய அளவிலான திரையரங்க உரிமையை 11:11 புரொடக்சனைச் சார்ந்த டாக்டர் பிரபு திலக் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் இணைந்து பணியாற்றிய குற்றம் 23 மற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணையத் தொடர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பார்டர் திரைப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதிலும், உளவுப்பிரிவு தொடர்பான கதைக்களத்தை கொண்டுள்ள பார்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இதனிடையே இப்படம் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறையும் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
11:11 புரொடக்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பு இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த படம் இம்மாதம் 24ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியிட முடியாமல் போய் உள்ளது என வருத்தத்துடன் பதிவு செய்துள்ள படக்குழு, அடுத்த மாதம் நல்ல தேதியில் இப்படத்தை நிச்சயம் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சினிமாவில் இறங்கும் போது என்ன தேவை? - நடிகர் சத்யராஜ் அளித்த அட்வைஸ்!