சென்னை:ஓவியர் மணியத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள லலித் கலா அகாடமியில், ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நேற்று (டிச.29) தொடங்கிய நிலையில் வரும் ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா துவக்க வைத்தார். மேலும், இவ்விழாவில் நடிகரும், ஓவியருமான சிவகுமார் மற்றும் விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஓவியம் மணியமின் ஓவியங்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ஓவியர் மணியம் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம்.
1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை 'ஆசிரியர் கல்கி" அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார். 1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
அஜந்தா ஓவியங்கள் மணியத்தின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப்பட்டன. அவருடைய நீடித்த கலைப் பயணத்துக்கு இது முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.ஆசிரியர் கல்கி அவர்களின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான "சிவகாமியின் சபதம்" தொடருக்கு இடையிடையே மணியம் வரைந்த சித்திரங்கள் கல்கி வாசகர்களிடம் மிகுந்த பாராட்டைப் பெற்றுத் தந்தன.