சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்தில் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ரசிகர்களால் எஸ்கே(SK), ப்ரின்ஸ் என அழைக்கப்படும் சிவகார்த்திகேயனின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய், அஜித்திற்கு பிறகு நிலையான மார்க்கெட்டை கொண்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்பட வெளியீடு தள்ளிப்போகும் நிலையில் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது 23வது படத்தை முருகதாஸ் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.