சென்னை: நடிகர் விஷால் லத்தி படத்தை தொடர்ந்து, 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். நாயகியாக ரிதுவர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் வினோத் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், நடிகர் விஷால் இதுவரை நடித்திராத வித்தியாசமாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, சுனில் ஆகியோர் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று(மார்ச்.8) நடைபெற்றது. இவ்விழாவில் விஷால், எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் ஓராண்டுக்குள் முடியவடையும் என்று கூறினார். இந்த நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்றும், நடிகர் சங்கத்தின் கட்டடத்தை அவர்தான் மீட்டார் என்றும் தெரிவித்தார். நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதே இடத்தில் நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் கூறினார்.