சென்னை:கடந்த 2013ம் ஆண்டு "வணக்கம் சென்னை" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், கிருத்திகா உதயநிதி. இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து விஜய் ஆன்டணி நடித்த "காளி" படத்தை கிருத்திகா இயக்கினார். மேலும் அவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான "பேப்பர் ராக்கெட்" வெப் சீரிஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் "யார் இந்த பேய்கள்" என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை, கிருத்திகா இயக்கியுள்ளார். இந்த பாடல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை, பா. விஜய் எழுதியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள நிலையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் தொகுப்பும், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பும் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இசை ஆல்ப குழுவினர், "சமூகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும், ஆதரிக்கவும் தவறினால், அது தரும் மனச்சோர்வு குழந்தையை கடுமையாக துன்புறுத்தும். வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும், வேதனைகளும் பொழுதுபோக்கு துறைகளில் உள்ள பிரபலங்களை பாதித்ததன் விளைவாகவே, இந்த விழிப்புணர்வு ஆல்பம் வெளிவந்துள்ளது. சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்த பாடலின் நோக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி மக்களை பயிற்றுவிக்கும். பாலியல் குற்றவாளிகள் ஒழிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.24 உள்ளூர் விடுமுறை!