சென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழில் 3, வை ராஜா வை படங்களும், சினிமா வீரன் என்ற ஆவணப்படமும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய '3' படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது பாலிவுட் திரையுலகம் வரை இசையமைப்பாளராக அசத்தி வருகிறார்.
இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் "லால் சலாம்" திரைப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, 'GANGS' என்ற வெப் சீரிசை தொடரைத் தயாரிக்க உள்ளார். முன்னதாக ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில், 2014ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தை செளந்தர்யா இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது 'GANGS' வெப் சீரஸை அமேசான் பிரைம் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்து வருகிறார். இந்த தொடரை நோவா ஆபிரகாம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரின் தொடக்கமாகத் தனது தந்தை ரஜினிகாந்திடம், படக்குழுவினரோடு வாழ்த்து பெற்றுக் கொண்டார்.