ஹைதராபாத்:நடிகர் அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று "நாளை ஸ்பெஷல் செய்தி வெளியாகும்” என கூறியிருந்தார். அவர் கூறியதுபோல புஷ்பா 2 குறித்து அப்டேட் வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், அல்லு அர்ஜூன் தனது வீடு முதல் புஷ்பா 2 செட்டில் ஷூட்டிங் நடப்பது வரை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
புஷ்பா 2 குறித்து 3 நிமிட க்ளிம்ப்ஸ் வீடியோவாக அல்லு அர்ஜூன் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தொடக்கத்தில் அல்லு அர்ஜூன் ”இன்று நான் உங்களை புஷ்பா செட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளேன். அதற்கு முன்பாக எனது ரசிகர்களை நான் எனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்” என கூறுகிறார்.
மேலும், இந்த வீடியோவில் அல்லு அர்ஜூன் தனது காலைப்பொழுதை யோகா உடன் எவ்வாறு தொடங்குகிறார் என காட்டப்படுகிறது. பின்னர், அல்லு அர்ஜூன் தனது காரில் புஷ்பா 2 ஷூட்டிங் நடக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்கிறார். ராமோஜி பிலிம் சிட்டியில் அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வீடியோவில் ”ரசிகர்கள் அன்பு மட்டுமே எனக்கு ஊக்கம் அளிக்கிறது. நான் அவர்களை பெருமைப்படுத்த விரும்புகிறேன்” என அல்லு அர்ஜூன் கூறுகிறார்.