மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் நேற்று (ஜூன் 3) வெளியான ‘சாம்ராட் பிரித்திவிராஜ்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.10.70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மன்னன் பிரித்திவிராஜ் சவுஹனின் வாழ்க்கை வரலாற்றைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் 2017ஆம் ஆண்டின் ’மிஸ் வோர்ல்டு’ உலக அழகியான மனுஷி சில்லார் நடித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், “ சாம்ராட் பிரித்திவிராஜ் முதல் நாளிலேயே ரூ.10.70 கோடி வசூலித்து மக்களைச் சென்றடைந்துள்ளது. இந்தியா மீது படையெடுத்து வந்தவர்களுடன் தன் இறுதி மூச்சு வரை சண்டையிட்டவர் ‘சாம்ராட்’ மன்னர்.
அவர், இந்தியா இந்தியர்களுக்கே என்று நம்பியவர். இக்கதையை அனைத்து இந்தியர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கேற்ப எங்கள் படத்தை ’கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு’ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் நம் நாட்டவரை மகிழ்விப்போம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
இப்படத்தில் சஞ்சய் தத், சோனு சூத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யஷ் ராஜ் பிலிம் ஃப்ரொடக்ஷன் சார்பாக வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. பாஜக ஆழும் மாநிலங்கலான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”போதைப் பொருள் உலகளாவிய பிரச்சினை" - கமல் ஹாசன்