எச்.வினோத் இயக்கத்தில் கடந்தாண்டு அஜித் நடித்து வெளியான திரைப்படம், வலிமை. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்தது. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்திருந்தார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றிய இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்ட இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படத்துடன் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அஜித்தின் நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தற்போது வரை ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வங்கிகளின் மோசடி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எச்.வினோத் சிறப்பான படத்தைக் கொடுத்துள்ளார் என்றும் பொதுமக்கள் தங்களுக்கிடையே பேசிக்கொண்டனர்.