சென்னை: துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் நடிகர் மோகன்லாலின் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் அஜித்குமார், மோகன்லாலை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சந்தித்த புகைப்படத்தை மோகன்லாலின் நண்பர் சமீர் ஹம்சா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த மயக்கும் மாலைப் பொழுதில், நண்பர்களான மோகன்லால் மற்றும் அஜித்குமார் சந்தித்துக் கொண்ட தருணம் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்கு முன்னதாக மோகன்லால் இயக்கி நடித்து வரும் அவரது கனவு திரைப்படமான பரோஸ் படத்தில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த தகவலை படக்குழு மறுத்தது. சில வருடங்களுக்கு முன் ராமோஜி பிலிம் சிட்டியில் மரக்காயர் படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித்குமார், மோகன்லாலை சந்தித்தார். அப்போது துணிவு படத்தில் மோகன்லால் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இது வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பு என படக்குழு மறுத்தது.