சென்னை:நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'அட்டகத்தி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு 'காக்கா முட்டை' திருப்புமுனை படமாக அமைந்தது. அதில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி உடன் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்தது.
பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க தொடங்கினர். அதாவது கனா, கிரேட் இந்தியன் கிச்சன், ட்ரைவர் ஜமுனா என தொடர்ந்து இதே போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது இவரது நடிப்பில் கடந்த வாரம் "சொப்பன சுந்தரி" என்ற திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ஃபர்ஹானா (Farhana) திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது 'ஃபர்ஹானா' படத்தையும் தயாரித்துள்ளது.
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் 'ஃபர்ஹானா' மட்டுமல்ல, பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது. இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளன.